சென்னை: சென்னை மெரினா கடற்கரை 8 மாதங்கள் கழித்து நாளை திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக சென்னையின் பிரபல அடையாளமான மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆகையால் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உருவானது. பின்னர், படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டிசம்பர் 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என்று அனுமதி அளித்தது.

8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரையில் நாளை முதல் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்றுள்ளன. மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர்.

பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.