சென்னை:  சென்னையில் 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16ந்தேதி தொடங்க உள்ளது. இதில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியின் முதல் பதிப்பை நடத்தி வருகிறது. வரும் 2023ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (Chennai International Book Fair – CIBF) 2023 ஜனவரி மாதம் நடை பெறவிருக்கிறது. உலகளாவிய அறிவு பரிமாற்றமே இக்கண்காட்சியின் நோக்கம். இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க பல நாடுகளிலிருந்தும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வரவிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மூன்று நாள் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில்,  புத்தக ஆசிரியர்களுடன் சந்திப்பு, உரையாடல் உட்பட பல நிகழ்வுகள் நடைபெறுகிறது.  மேலும் சர்வதேச அரங்கில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் முன்னணி தமிழ் பதிப்பாளர்களை சந்திக்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த பகுதியாக இந்த கண்காட்சி அமைய உள்ளது. சர்வதேச எழுத்தாளர்கள், நோபல் பரிசு ெபற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளியீட்டாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பங்கேற்பாளர்கள் தங்களின் புத்தகங்களின் உரிமைகளை விற்க அல்லது வாங்கக்கூடிய வகையில் ‘உரிமைகள் மையம்’ என்ற நிகழ்வும் இதில் இடம்பெற உள்ளது. மேலும் கனடா, பின்லாந்து போன்ற அயல்நாட்டு மாணவர்களை ஈர்க்கவும், உயர்கல்வி உதவித்தொகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனவே, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்பார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய மொழிபெயர்ப்பு மானியத் திட்டத்தை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘தமிழ் மற்றும் உலகளாவிய புத்தகம் வெளியீடு’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆண்டுகளில் புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்களுடன் இணைந்து புத்தகங்களை விற்பனை செய்வதற்கு 200க்கும் மேற்பட்ட தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சர்வதேச புத்தக கண்காட்சி திட்டத்திற்கான துவக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  சென்னையில் ஜனவரி 16, 17, 18 தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என கூறினார். மேலும்,  புத்தக கண்காட்சியில் 40 நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

முன்னதாக பொது நூலகங்களின் இயக்குநர் கே.இளம்பகவத், சங்கர சரவணன், இணை இயக்குநர், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஜெர்மனிக்குச் சென்று அங்கு நடைபெற்ற பிராங்பேர்ட் புத்தக கண்காட்சியை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்தே சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கான நடவடிக்கைளை தமிழகஅரசு முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.