சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேசினார். அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்களும் பணத்தை பறிகொடுத்துவிட்டு பலர் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இன்றுகூட ஒரு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துள்ளார். இதனால் ஆன்லைன் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில்   குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு,  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் தமிழகஅரசு பதில் அளித்தது. இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. இருந்தாலும், ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை இன்று காலை 11மணிக்கு நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆளுநருடனான சந்திப்பு முடிந்த பிறகு, ஆளுநர் மாளிகை வாயிற்பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்றவர்,   குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது என்றார்.

மேலும்,  ஆப்லைனில் விளையாடுவதற்கு ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு; ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.