சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை  என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய ஓய்வுபெற்ற இணை இயக்குனர் மருத்துவர் நக்கீரன், சென்னை மருத்துவ கல்லூரி பொது அறுவை சிகிச்சை நிறுவன ஓய்வு பெற்ற இயக்குனர் மருத்துவர் பாண்டியராஜ், முகமது அன்சு ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மருத்துவர் நக்கீரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாசம், ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைவதாகவும், ஏற்கனவே நீதித்துறை நடவடிக்கைகளை மார்ச் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், மாநில நிலவரங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர்,  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்றாவது அலை தீவிரமாகும் என நிபுணர்கள் தெரிவித்து  உள்ளனர் என்றும், தொற்று பரவல் காரணமாக,  தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும்,    மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படியும், அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டுகளை பின்பற்றும்படியும் உத்தரவிடலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  5 மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்போது, மாநில உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோருவது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என கூறிய நீதிபதிகள்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியது என்றும், தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன், மாநில தேர்தல் அணையம் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்  கேட்கவில்லை என்று கூறியுள்ளது.