சென்னை:  விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில்  மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்துகளை அணுகும் வகையில்  வசதி செய்யப்பட்டு இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் காரணமாக, தமிழ்நாடு அரசு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் பேருந்து நிலையங்களையும் அமைத்து வருகிறது.

சென்னையில் இருந்த வெளிஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு உகந்த வகையில், தற்போது கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் உள்ள நிலையில், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக  தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு  அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இல்லை எனக் கூறி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது  மனுவில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி பேருந்து நிலையம் அமைக்கப்படும் வரை, அதற்கு பணி முடிப்பு சான்று வழங்க தடை விதிக்க வேண்டும். விதிகளின்படி பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்ட பின், செப்டம்பர் 15ம் தேதி கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தின் தளம் வழுக்கும் தன்மையுடன் அமைந்துள்ளது. சக்கர நாற்காலியில் வரும் பயணிகளுக்காக பேருந்து நிற்கும் பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்படவில்லை என்றார். அதற்கு, அரசுத் தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, கூட்டு ஆய்வுக்குழு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றார்.

இதையடுத்துநவம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

[youtube-feed feed=1]