சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகத்துக்காக நிலம் கையகப் படுத்தப்பட்டது. நிலத்துக்கு ஒரு சென்ட்டுக்கு, 5,500 ரூபாய் இழப்பீடாக வழங்க காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தாரர்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இழப்பீட்டு தொகையை சென்ட்டுக்கு 10 ஆயிரத்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க, 2012 -ல் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் சென்ட்டுக்கு 10,325 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கக் கோரி, நில உரிமையாளர் ஆனந்த்குமார்  விண்ணப்பித்தார். தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, அவரின் விண்ணப்பத்தை  நிராகரித்தார் ஆட்சியர்.

அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆனந்த்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை என்று கூறி,  ஆட்சியருக்கு எதிராக ஆனந்த்குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

ஆனால் ஆஜராகாததால், காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின்னர்,  அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வாரண்ட்டை திரும்பப் பெற்று, வழக்கை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.