சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து செய்யாறு மாவட்டம் எப்போது உருவாகும் என்ற மனுவுக்கு விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பையூர் தாலுகாவை சேர்ந்த விஜய்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், செய்யாறை தலைமையிடமாக கொண்டு வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், ஆரணி உள்பட 5 தாலுக்காக்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், வேலூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. பையூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அதிகாரிகளை சந்திக்க 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டி உள்ளது.

இதுகுறித்து மனு அளித்ததாகவும், செய்யாறை மாவட்டமாக்க அறிவிக்க உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்தாலும், அறிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து ஜனவரி 23ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.