சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான உத்தரவில் 75 கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பராமரிப்பு இன்றி ஏராளமான கோவில்கள் கிடக்கின்றன. இவற்றை பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு சூமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றதையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், தமிழகத்தில் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.

நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.

கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலாக தயாரிக்க வேண்டும்.

கோவில்களை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.

கோயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

சிலைகள், நகைகளைப் புகைப்படம் எடுத்து, அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும்’

‘கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை தமிழகஅரசு உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும்.

கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்;

கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்;

மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும்’

உள்பட 75 உத்தரவுகளை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும் இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் தமிழகஅரசுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.