சென்னை: பிரபல மூத்த நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா மீதான ஈஎஸ்ஐ வழக்கில், அவரது சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அபராதமாக ரூ.15 லட்சத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ், தெலுங்கு  உள்பட இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில்  கோலோச்சி வந்தவர் நடிகை  ஜெயப்பிரதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்  நினைத்தாலே இனிக்கும், கமலஹாசனுடன் சலங்கை ஒலி, தசாவதார உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். பின்னர் அரசியலில் களமிறங்கி எம்.பி.யாகவும் பணியாற்றினார். சிறிது காலம் கழித்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவருக்கு சென்னையில் தியேட்டர் உள்பட பல மாநிலங்களில் சொத்துக்கள் உள்ளன. சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை, சில தொழில்களில் இன்வெர்ஸ் செய்துள்ளதோடு, இவரின் பெயரில் திரையரங்கம் கட்டி அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்.

இவரது பெயரில் சென்னை ராயப்பேட்டை ஜிபி ரோட்டில்,  ஜெயப்பிரதா என்ற பெயரிலான  திரையரங்கம் இயங்கி வந்தது. இந்த திரையரங்கத்திற்கான சொத்து வரி உள்பட எந்தவொரு வரிகளும் முறையாக கட்டாததால், சீல் வைக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது அவரை சிறையில் தள்ள காரணமாக அமைந்துள்ளது.

சென்னை ஜெயபிரதா திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இவர் வசூலித்த இ.எஸ்.ஐ., தொகையை, முறையாக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈபட்டுள்ளார். தியேட்டர் மூடப்பட்டதும், அந்த தொழிலாளர்கள் இதுதொடர்பாக வழக்கு தொடுத்தனர். மேலும்,  தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  ஜெயப்பிரதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். ஆனால்,  அதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஜெயப்பிரதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு  செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை தொடர்ந்து,  நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு விதித்த சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும், இன்னும்  15 நாட்களுக்குள் 20 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.