சென்னை:

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வனப்பகுதியான  கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் திட்டத்தின்படி 4500 குடியிருப்புகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கில், யானைகள் நடமாட்டம் உள்ள வெள்ளியங்கிரி பகுதியில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டக்கூடாது என்றும், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் வீடு கட்ட முடிவு செய்துள்ள பகுதி,  யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்று வனத்துறை தெரிவித்திருந்த நிலையில்,  குடிசை மாற்று வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டும் பணிகள் தொடரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.