சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு துபாய் செல்ல பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் துபாய்க்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.  விஜயகாந்த்துக்கு உடன் இருந்து உதவி செய்ய அவர் மனைவியும் தேமுதிக பொருளாளருமான  பிரேமலதா விஜயகாந்த் உடன் செல்ல திட்டமிட்டிருந்தார்.  பிரேமலதா மீது திருநெல்வேலி காவல்துறையால் 2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட குற்ற வழக்கைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டது

இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் சென்னை உயர்ந்தீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இன்று இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் முன்பு நடந்தது.  இதில்  பிரேமலதாவின் வழக்கறிஞர் வில்சன், திருநெல்வேலி காவல்துறையால் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திலிருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்றும், வழக்கு தொடர்பாக எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜயகாந்த்தின் சிகிச்சையின் போது பிரேமலதா உடனிருந்து உதவ வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   பிரேமலதா சார்பில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.   இதை யொட்டி நீதிபதி, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் ”வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் ”என்ற உறுதிமொழியை அதிகாரியிடம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.