சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்துவதையொட்டி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
“குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சட்டங்களைப் பொருட்படுத்தாமல் சிதம்பரம் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்குத் திருமணங்கள் செய்து வைக்கின்றனர். இந்த குழந்தை திருமணங்களைத் தடுக்க இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய நிரந்தர கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்”
எனக் கோரியிருந்தார்.
இன்று இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சஃபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு கோயில் விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தை திருமணம் குறித்து ஏற்கெனவே பெறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பொது தீட்சிதர்களை சேர்க்கவும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.