சென்னை

சென்னை துறைமுகத்தின் இந்தியன் வங்கி வைப்பு நிதியில் ரூ.100 கோடி மோசடி நடந்தது உயர்நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை துறைமுகம் சார்பில் கடந்த வருடம் இந்தியன் வங்கியின் கிளையில் வைப்பு நிதியாக ரூ. 100.57 கோடி செலுத்தப்பட்டது.  ஒரு மோசடி கும்பல் இதை அறிந்து ஒரு மோசடி கும்பல் அதைச் சுருட்டத் திட்டமிட்டுள்ளது.  இதையடுத்து சென்னை துறைமுக பொது காப்பீடு நிதியின் துணை இயக்குநர் என ஒருவர் வங்கியை அணுகி உள்ளார்.  அப்படி ஒரு பதவியே துறைமுகத்தில் கிடையாது.

இந்தியன் வங்கியின் துறைமுகம் சார்பில் போடப்பட்டிருந்த ரூ.100.57 கோடி பணத்தை வேறு ஒரு கரண்ட் அக்கவுண்டுக்கு மாற்றப் போலி ஆவணங்கள் அளித்துள்ளார்.  வங்கி அதிகாரிகள் அவற்றை உண்மை என நம்பி துறைமுக வைப்பு நிதியில் இருந்து இந்த கணக்குக்கு மாற்றி உள்ளனர்.    அதில் இருந்து அந்த மோசடி பேர்வழி பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாகத் தெரிய வந்தது.

இது குறித்து துறைமுக அதிகாரிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  அவர் ஆணைக்கு இணங்க குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர் விசாரணையில் இந்த மோசடியில் ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டது தெரிய வந்தது.   இந்த கும்பல் ஏற்கனவே பெங்களூரில் இதே போல் மோசடி நடத்தியதும் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.  தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் விசாரித்து வருகிறார்.  மூன்றே தினங்களில் இவ்வாறு முழுப் பணமும் போலி ஆவணங்களின் அடிப்படையில் ஒரு போலிக் கணக்குக்கு மாற்றப்பட்டது குறித்து நீதிபதி மகாதேவன் தனது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார்.