சென்னை:

விதிகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை  என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

அதிமுகவினர் வைத்த பேனர் காரணமாக, இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில், தமிழகத்தில் பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் சாட்டையை சுழற்றிய நிலையில், சென்னை மாநகராட்சி,  சென்னையில் விதிமுறைகளை மீறி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பேனர் அச்சகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பேனர்கள் அச்சடிக்க வேண்டும்.  அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பேனர் அச்சகங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு, அச்சடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல. எனவே மாநகராட்சியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை என அச்சகங்களுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி அக்டோபர் 23-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.