அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான செந்தில் பாலாஜியை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் அதிமுகவில் அவ்வப்போது உட்கட்சி பூசல் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போது, அவருக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்து தினகரன் விலக்கி வைக்கப்பட்ட போது, தினகரன் உடன் பயணித்த காரணத்தால் தனது எம்.எல்.ஏ பதவியை செந்தில் பாலாஜி இழந்தார். சுமார் 1 வருட காலம் தினகரனுடன் பயணித்து வந்த செந்தில் பாலாஜி, பின்னர் திமுகவில் இணைந்தார். அப்போது இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுகவில் இணைந்த பின்னர் நடைபெற்ற அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டார். இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் செந்தில் பாலாஜி மீதான தாக்குதலை அவ்வப்போது அதிமுக தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், பெரியகுளத்துப்பாளையத்தில் கட்டப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். ஆனால் செந்தில் பாலாஜி என்னை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். நான் என்ன சொல்கிறேனென்றால், நீயே 16 கட்சிகளுக்கு போயிட்டே. இந்த திட்டங்களை எல்லாம் நான் தான் செய்தேன், நான் தான் செய்தேன் என்று நீ ஒருபோதும் சொல்லக்கூடாது. வெட்கம், ரோஷம் இருந்தால் இனி நான் செய்தேன் என்று எதையும் சொல்லக்கூடாது. இதே குளத்துபாளையத்தை சேர்ந்தவரின் நிலத்தை, அடித்து பிடுங்கியது யார் ? அது தொடர்பாக யார் மேல் கேஸ் இருக்கிறது என்று எண்ணி பார்க்க வேண்டும்.

24 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கடத்தி, நீ யார் காலில் போய் விழுந்து, வழக்கில் இருந்து தப்பித்தாய் என்பது ஊருக்கே தெரியும். கள்ளச்சாராயத்தை பாட்டிலுக்குள் அடைத்து வைற்றது யார் என்பது ஊருக்கே தெரியும். வழக்கு பற்றி நீ பேசலாமா ? இதையெல்லாம் நான் பேச ஆரம்பித்தால், உன் பிழைப்பு தண்டவாளத்தில் ஏறிவிடும்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இப்பேச்சால், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.