துபாயிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 23 நவீன ரக துப்பாக்கிகளை (ஏா்கன்) மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து சகோதரா்கள் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரிக்கின்றனா்.

துபாயில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 22ம் தேதி வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோந்த சிராஜம் மூனீா், அவரது சகோதரா் முகமது கையூம் மற்றும் இஜாஜ் அகமது ஆகிய 3 பேரின் பெட்டிகளில் நவீன ரக துப்பாக்கிகள் இருந்தன. இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் எனக் கூறியுள்ளனா்.

இதனைத்தொடா்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கிகளை சோதனையிட்டபோது அவை நவீன ரக துப்பாக்கிகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அனுமதியில்லாமல் விமானத்தில் கொண்டு வந்த காரணத்தால் துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் ரூ.17. 91லட்சம் மதிப்புள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் வெங்கடேஷ்பாபு, ”துபையிலிருந்து கடந்த 22ம் தேதி மதுரை வந்த விமானத்தில் சோதனையிட்ட போது, 3 பெட்டிகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொண்டு வந்தனா். இவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்து பாா்க்கப்பட்டது. இந்த வகை நவீன ரக துப்பாக்கிகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத நிலையில் தற்போது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.