சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

இன்று இந்த மனு  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மனுவின் மீதான விசாரணையின் போது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர்.  இதில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஆட்கொணர்வு மனு மீதான உத்தரவைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்து தற்போது நீதிபதிகள் உத்தரவு  பிறப்பித்துள்ளனர்.

உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், அவரது மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்றுச் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம் என்று தெரிவித்துள்ளனர்.