சென்னை

கொரோனா குறித்த பயத்தை வைத்து ஆதாயம் அடைந்ததற்காகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலியில் பல ஆயுர்வேதப் பொருட்கள், உணவுப்பண்டங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.   அவ்வகையில் கொரோனாவை குணப்படுத்த இந்நிறுவனம் ஒரு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதன் பெயர் கொரோனில் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த மருந்து கொரோனாவை குணப்ப்டுத்தும் மருந்து இல்லை எனவும் இது வெறும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் மருந்து எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.   இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த மருந்தை கொரோனில் எனப் பெயரிட்டு விற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை நீக்குமாறு பதஞ்சலி நிறுவனம் அளித்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வந்தார்.  அவர் இன்று அளித்த உத்தரவில், “கொரோனில் என்னும் பெயரை ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த ஆருத்ரா எஞ்சினியர்ஸ் என்னும் நிறுவனம் பதிவு செய்துள்ளதால் இந்த பெயரைப் பதஞ்சலி நிறுவனம் பய்னபடுத்தக்கூடாது.

மேலும் இந்த நிறுவனம் முதலில் கொரோனாவுக்கு மருந்து என அறிமுகப்படுத்திய மருந்து சளி, இருமல், ஜுரத்துக்கு எதிராக எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்தாகும்.   எனவே கொரோனா அச்சுறுத்தலை பயன்படுத்தி இந்த நிறுவனம் ஆதாயம் அடைய முயன்றுள்ளது.  இந்த நிறுவனம் தங்களை வருடத்துக்கு ரூ.10000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனம் எனச் சொல்லிக் கொள்ளும் போது மேலும் வருமானத்தை அதிகரிக்க இவ்வாறு கூறி உள்ளது.

சென்னை அடையாற்றில் உள்ள புற்றுநோய் நிலையம் மற்றும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதே சேவையை இலவசமாகச் செய்து வருகின்றன  எனவே நான் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அதில் ரூ.5 லட்சத்தை அடையாறு புற்று நோய் நிலையத்துக்கும் ரூ,5 லட்சத்தை அரும்பாக்கம் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் அளிக்க உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த இரு நிருவனஙக்ளுக்கும் இந்த தொகையை வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதிக்குள் அளித்து விட்டு அந்த விவரங்களைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.