சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலானது. நடிகை திரிஷா நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.

நடிகர் மன்சூர் அலிகானின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.  குறிப்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர் சங்கமும் அவரை மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.

தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மௌ விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது  மேலும்  பெண்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.