சென்னை

ந்தோனேசியப் பெண் மீது பொய்யான விபசார வழக்குப் பதிந்த காவல்துறை ஆய்வாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த கடெக் திவி அனி ரசிமி என்னும் பெண் பாலி நகரில் வசித்தவர் ஆவார். இவர் நீலாங்கரையில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற மசாஜ் கடையில் பணி புரிந்து வந்தார். இந்த மசாஜ் கடையில் விபசாரம் நடப்பதாகக் காவலர் குமார் என்பவர் புகார் அளித்தார். இதையொட்டி ஆய்வாளர் நடராஜன் வழக்குப் பதிந்தார்.

அதன் அடிப்படையில் இந்த மசாஜ் செண்டரை நடத்தி வந்த சுகந்த், ஹேமா, மற்றும் ஐந்து வெளிநாட்டுப் பெண் பணியாளர்கள் கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த பணியாளர்களில் கடெக் திவியும் ஒருவர் ஆவார். கடெக் திவி நாடு கடத்தப்பட்டு இந்தோனேசியா அனுப்பப்பட்டார். அவர் தன் மீது தவறான வழக்குப் பதியப்பட்டதால் தமக்கு நஷ்ட ஈடாக ரூ. 10 லட்சம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கெடக் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி எனவும் அவர் முறையான வேலை உரிமம் பெற்று வருடம் $25000 ஊதியம் பெற்று வந்ததால் அவருக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும் அந்த பெண் மீது பொய் வழக்குப் பதிந்த ஆய்வாளர் நடராஜன் ஊதியத்தில் இருந்து 50 மாதத் தவணைகளாக பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையொட்டி காவல்துறைத் தலைவர் உள்துறைக்கு அந்தப் பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் நஷ்ட ஈடு அளித்து விட்டு அதை ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த மாதம் முதல் அவர் ஊதியத்தில் இருந்து அந்த தொகை பிடித்தம் செய்யப்பட உள்ளது. அத்துடன் ஆய்வாளர் நடராஜன் மீது துறை சார்பான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.