சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டது.

மோடி அரச கடந்த 2019ஆம் ஆண்டு புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு தமிழக அரசியல் கட்சிகள்  போராட்டம் நடத்தினர்.. இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இவர்கள்மீது  சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வருகிற ஜூலை 1ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் வாரண்ட்  பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் சார்பிலும் வழக்கை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் ஜனநாயக ரீதியிலான போராட்டம் தான் என்றும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதற்கு தமிழகஅரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால், அவர்கள்மீதான குற்றப்பத்திரிகயை ரத்து செய்யலாம் என கூறினார்.  இதையடுத்து மூவர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.