சென்னை

பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் எனச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பல பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதனால் மக்களில் பலருக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.   சில வேளைகளில் சாலைகளின் நடுவே இந்த கழிவுகள் கொட்டப்படுவதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இவ்வாறு கொட்டுவதைப் பல முறை சென்னை மாநகராட்சி கண்டித்துள்ளது.   ஆயினும் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவது தொடர்வது நிற்கவில்லை.  எனவே இன்று சென்னை மாநகராட்சி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.  இதை மீறுவோருக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.