சென்னை

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து 6.189 மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றி உள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிங்கார சென்னை 2.0 என்னும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.  தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராகப் பதவி வகிக்கும் ககன்தீப் சிங் பேடி பதவி ஏற்றதில் இருந்தே சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டு பெற்று வருகிறார்.  இந்நிலையில் அவருக்குச் சிங்கார சென்னை திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சென்னையில் உள்ள 30 நீர் வழி கால்வாய்களில் இருந்து 6.189 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.  இவை சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டுள்ளன.  நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், ”  கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீர்வழி கால்வாய்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ஆகாய தாமரைகள் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளன” என  குறிப்பிடப்பட்டுள்ளது.