சென்னை: சென்னையில் கொரோனா 2வது அலையின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா 3ஆவது அலைiய எதிர்கொள்வது தொடர்பாக சிறப்புகுழு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
கொரானா தொற்றின் 2வது அலை தமிழகத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த மாதம் அதிகம் காணப்பட்டாலும், மாநில அரசு, சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, 7 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 1,500க்கும் கீழாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், தொற்று பரவலின் 3வது அலை ஓரிரு மாதங்களில் மீண்டும் வரலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து, அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய பல்துறை வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த குழுவில், மருத்துவர்கள், தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறையினர், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த சிறப்பு பணிக்குழுவில் இடம்பெற உள்ளனர். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.