சென்னை: சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். பல மாதங்களாக வாடகை கொடுக்காத நிலையில், மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி பல இடங்களில் கட்டிடங்கள், கடைகள் உள்ளன. இதை குறைந்த வாடகைக்கு விட்டு, வருமானத்தை ஈட்டி வருகிறது. ஆனால், பலர் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களிடம் வாடகையை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக ஏராளமான  கடைகள் உள்ளது. இந்த கடைகளை நிர்வகித்த வரம் பலர் பல மாதங்களாக முறையாக  வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி, ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி உள்ளது. இதுகுறித்து பல முறை நோட்டீஸ் வழங்கியும், வாடகை செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த 130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பூட்டி சீல் வைத்தனர். வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக  கடைகளை பூட்டி சீல் வைத்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.