சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தமுள்ள 200 வார்டுகளில், 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 74,416 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதை ஆய்வு செய்த மாநில தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுகளில், 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் சேர்த்து, 3 ஆயிரத்து 546 வேட்புமனுக்கள் பேறப்பட்ட நிலையில், அதில் 243 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்றும், 633 வேட்புமனுக்கள் வேட்பாளர்களால் திரும்பப்பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள மாநகராட்சி, இறுதியாக 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.