சென்னை:

சென்னை மாநகரம்  நீர் பற்றாக்குறையிலிருந்து வெளியேறிவிட்டதாக சென்னை மெட்ரோவாட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போன நிலையில், சென்னை மாநகரம் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போனதாலும், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டபடியாலும் மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வந்தனர்.

தமிழக அரசு கல்குவாரி, தனியார் விவசாய இடங்களில் நிலத்தடி நீர்  மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மக்களுக்கு வழங்கி வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் சமீப காலமாக பெய்து வரும் மழை மற்றும் பருவமழை தொடங்கியுள்ள காரணங்களாலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்  ஏரி குளங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவு உயர்ந்து உள்ளது.

இதனால், மக்களின் தண்ணீர் தேவை குறைந்த நிலையில், மெட்ரோ வாட்டர் குழாய்கள் மூலம் அனுப்பும் தண்ணீரின் அளவையும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டு உள்ளதாகவும், இனி சென்னை நீர் நெருக்கடிக்கு ஆளாகாது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ வாட்டர், தனது அதிகாரப்பூர்வமான பக்கத்தில் டிவிட் பதிவிட்டுள்ளது. அதில்,  நகரம் ’அதிகாரப்பூர்வமாக நீர் பற்றாக்குறையிலிருந்து வெளியேறியது’ என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய மெட்ரோவாட்டர் அதிகாரிகள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான  பூண்டி மற்றும் ரெட் ஹில்ஸ் உள்ளிட்ட முக்கிய ஏரிகளில் 4,000 மில்லியன் கன அடி சேமிப்பு உள்ளது, மேலும் தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்துகொண்டிருக்கிறது.  இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம்  ஒரு நாளைக்கு 525 மில்லியன் லிட்டரிலிருந்து 650 மில்லியனாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதை படிப்படியாக குறைந்து விட்டதாகவும், ஒரு நாளைக்கு  12 ஆயிரம் முறை வாகனங்களில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 7,700 முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.