சென்னை: அதிகாலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மேலும் 2 மணி நேரம் மழை தொடரும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தெற்மேற்கு பருவமழை காலத்தில் இருந்தே  தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இதற்கிடையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளது. மேலும் வெப்பச்சலனம், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவற்றாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. முதலில் லேசான தூறலாக தொடங்கிய மழை பின்னர் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்ட்ரல், பிராட்வே . அம்பத்தூர், தாம்பரம், வடபழனி, வில்லிவாக்கம், ஆவடி, நீலாங்கரை, கோவிலம்பாக்கம், குரோம்பேட்டை, கோயம்பேடு, மாதவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்  திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதுமட்டுமன்றி  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஆய்வு மைய இயக்குனர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும் எனவும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.