மதுரை:

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமா ரெயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் அதிக அளவிலான தொழிலாளர்களை கொண்ட ரெயில்வே துறையிலும், மோடி அரசின் தனியார் மயம் கொள்கை அமல்படுத்தப்பட இருக்கிறது.

தற்போது ரெயில்வே துறையில் ஸ்டேசன் மாஸ்டர்கள், கார்டுகள், என்ஜின் டிரைவர்கள் உள்ளிட்ட பணிகள் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மற்ற அனைத்து பிரிவுகளும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளன. தற்போது ரெயில் நிலையங்களையும் தனியாருக்கு குத்தகைக்கு கொடுக்க ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்திய ரெயில்வேயில் 7,600 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 75 ரெயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஏ-1 பிரிவை சேர்ந்தது. 332 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவை சேர்ந்தவை.

தமிழகத்தை தலைமையிடமாக கொண்டுள்ள  தென்னக ரெயில்வேயில் 608 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 8 ரெயில் நிலையங்கள் ஏ-1 பிரிவிலும், 42 ரெயில் நிலையங்கள் ஏ பிரிவிலும் உள்ளன.

இவற்றில்  தற்போது 23 ரெயில் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட தயார் நிலையில் உள்ளது. அத்துடன் சென்னை சென்ட்ரல் மற்றும் கேரளாவில் கோழிக்கோடு ரெயில் நிலையங்களும் தனியார் மயமாகின்றன.

ரெயில் நிலைய வளர்ச்சித்திட்டத்தின்படி,  தனியாருக்கு 45 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

. கிழக்கு மண்டல ரெயில்வேயில் ஹவுரா ரெயில் நிலையம் ரூ.400 கோடிக்கும், தென்னக ரெயில்வே மண்டலத்தில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம், மூர் மார்க்கெட் வளாகத்தின் தரைத்தளம் ஆகியன ரூ.350 கோடிக்கும் ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.