பெங்களூரு:

ர்நாடகாவில் வெகுநாட்களாக கோரிக்கைகள் வைத்து வரும் லிங்காயத் இனத்தினரின் தனி மத கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார் முதல்வர் சித்தராமையா.

இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ‘லிங்காயத்’ சமூகத்தினரை, இந்து மதத்தில் இருந்து பிரித்து தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்ற வெகுநாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, அவர்களின்  கோரிக்கை ஏற்கப்படும் என சித்தராமையா ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாரதியஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினர் 11.5% முதல் 19% மக்கள் தொகை உள்ளனர்.  மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 110-ல் வெற்றியை  தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத்து இன மக்கள் இருக்கின்றனர்.

கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக லிங்காயத்துகள் பாஜகவுக்கும் ஒக்கலிகா சமூகத்தினர் தேவகவுடாவின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸுக்கும் ஆதரவாக வாக்களிப்பர்.

இந்த நிலையில், லிங்காயத்து இன மக்களுக்கு தனி மத ஒப்புதல் கொடுக்க சம்மதம் தெரிவித்ததின் காரணமாக, அவர்களின் ஓட்டு காங்கிரஸ் பக்கம் சாயும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது பாரதியஜனதாவுக்கு வயிற்றை கலக்கி உள்ளது.

சித்தராமையா அமைச்சரவையில் உள்ள 5 லிங்காயத்து அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் இதற்காக பிரசாரம் செய்ய தயாராகி வருகின்றனர்.

தற்போது என்ன செய்வது என்று தெரியாத பாரதியஜனதா, முதல்வர் சித்தராமையாவின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்க கூடாது என கூறுகிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

இந்த பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் கட்சிகளுக்கிடையே பரபரப்பு நிலவி வருகிறது.