சென்னை

குவைத் நாட்டுக்குப் பணி புரியச் சென்று சித்திரவதைக்கு உள்ளான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பி உள்ளார்.

சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணவேணி தம்பதியர் வசித்து வந்தனர்.   இவர்களுக்கு லோகேஸ்வரன், கவுதம், சதீஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.   கட்டிட வேலை செய்யும் கிருஷ்ணமூர்த்தி வருமானக் குறைவால் மிகவும் துயருற்று வந்தார்.  அப்போது கிருஷ்ணவேணிக்கு ஒரு பிரபல துணி விற்பனை கடையின் விற்பனையாளர் பெண்ணின் நட்பு கிடைத்தது.

அந்தப் பெண் அவரைத் திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தமிழ் என்னும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடித் தருபவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.   கிருஷ்ணவேணிக்கு குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்யும் பணியை வாங்கித் தர செந்தமிழ் ஒப்புக் கொண்டுள்ளார்.  கிருஷ்ணவேணிக்கு மாதச் சம்பளம் ரூ.23000, இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி, போக வர விமான கட்டணம் என்னும் ஊதியத்துக்கு கிருஷ்ணவேணி ஒப்புக் கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அன்று குவைத்துக்கு சென்ற கிருஷ்ணவேணி முதல் மாதம் வரை எவ்வித துயரும் இன்றி இருந்துள்ளார்.  அவருக்கு ரூ.18000 ஊதியமும்  அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்குச் சிறு தவறுகளுக்கும் அடி உதை, பட்டினி போடுதல் என சித்திரவதை தொடங்கி உள்ளது  அவர் தனது நிலைமையை வீடியோ மற்றும் ஆடியோ மூலம் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்.

கிருஷ்ணவேணியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி இந்த வீடியோவுடன் சமூக ஆர்வலரான கன்யா பாபுவை சந்தித்தார்.    அவர் இந்த விவகாரத்தைத் திருவண்ணாமலை காவல்துறையினரிடம் எடுத்துச் சென்றுள்ளார்.  அவர்கள் செந்தமிழை பிடித்து விசாரித்து கிருஷ்ணவேணியின் குவைத் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரை மீட்டுள்ளனர்.    குவைத்தில் இருந்து  பெங்களூருவுக்கு நேற்று முன் தினம் கிருஷ்ணவேணி திரும்பி வந்துள்ளார்.

அவர் திருவண்ணாமலை சென்று தனது கணவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருக்கு உதவிய கன்யா பாபுவை சந்தித்துள்ளார்.  அப்போது செந்தமிழும் அங்கு உடன் இருந்துள்ளார்.    கிருஷ்ணவேணியை குவைத்துக்கு அனுப்ப செந்தமிழ் பணம் ஏதும் பெறவில்லை என்பதை கன்யா பாபு உறுதி செய்துள்ளார்.  அதனால் செந்தமிழ் காவல்துறையினரால் கைது செய்யப்படவில்லை.   கிருஷ்ணவேணி நேற்று சாலை வழியாகத் தனது அம்பத்தூர் இல்லத்துக்குப் பத்திரமாக திரும்பி வந்துள்ளார்.