சென்னை

காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவினருக்குத் தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல்  பிரச்சாரம் மும்முரமாக  நடந்து வருகிறது.   தமிழக அமைச்சர்களும் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.   தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தில் மறைந்த காமராஜர் உடலைச் சென்னைக் கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுத்து விட்டதாகத் தெரிவித்தார்.

இதை மறுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைந்த கடுமையான உழைப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  காமராஜரின் உடலைச் சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மறுத்துவிட்டதாக முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கிற வகையில் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன். உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அதிமுகவினர் எவருக்கும் தகுதியில்லை.

காமராஜர் நினைவுக்காகத் தமிழக மாணவ – மாணவியர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்றைய முதல்வர் கலைஞர். அதற்கு அரசு நிதியுதவியாக ஆண்டுக்கு ரூபாய் 1 கோடியே 31 லட்சம் ஒதுக்கியவரும் கலைஞர் தான்.

ஆனால், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதற்கான நிதி மறுக்கப்பட்டதால் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதில்லை. இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு காமராஜர் பெயரைப் பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.