சென்னை

மிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசுப் பள்ளிகளில் பணி புரிவோருக்கு இனி மின்னணு விரல் ரேகை வருகைப் பதிவேடு பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பழங்குடி மாணவர்கள் தங்கிப் படிக்கும் அரசுப்பள்ளிகள் மொத்தம் 315 உள்ளன.  இதில் சுமார் 27000 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.   இந்த பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் உள்ளிட்ட பலர் பள்ளிக்குச் சரியாக வருவதில்லை எனவும் பள்ளி நேரம் முடிவடையும் முன்பே சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த பள்ளிகளில் உள்ள விடுதிகளுக்குத் தலைமை ஆசிரியர்களே வார்டனாக உள்ளனர்.  இவர்களும் அங்கு இல்லாத நிலையில் மாணவர்களில் சிலர் அங்குள்ள சமையல்காரர்கள் மற்றும் காவலர்களால் பாலியல் சீண்டல் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.   எனவே இதை களைய அரசு முடிவு செய்தது.  அதையொட்டி இந்தப் பள்ளிகளில் மின்னணு கைரேகை வருகை பதிவேடு பொருத்தப்பட உள்ளது. இதில் அனைத்து ஊழியர்களும் காலையும் மாலையும் ரேகை பதிய வைக்க வேண்டும்

இந்த வருகைப் பதிவேடு மூலம் ஆசிரியர் மற்றும் இதரப் பணியாளர்களின் வருகை மற்றும் வேலை நேரம் ஆகியவை கண்காணிக்கப்பட உள்ளன.  அத்துடன் இந்த பதிவேடுகள் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களின் மொபைல்களுடன் இணைக்கப்பட உள்ளன.  இதன் மூலம் அவர்கள் அனைத்துப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்த விவரங்களை அறிய முடியும்.