தமிழகத்தின் மொத்த மின் தேவை சுமார் 16000 மெகாவாட் இதில் சராசரியாக 3500 முதல் 3600 மெ.வா. மின்சாரத்தை சென்னை நகரம் பயன்படுத்துவதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மே மாதம் 4 ம் தேதி 3716 மெ.வா. மின்சாரம் தேவைப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஏப்ரல் 29 ம் தேதி 17,563 மெ.வா. மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2022 ம் ஆண்டு சென்னையின் தேவை 4000 மெ.வா. வரை உயரக்கூடும் என்று டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடையில் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளதால் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டின் தேவை அதிகரித்துள்ளதாகவும் இரவு 9:30 முதல் 11:30 வரை மின் பயன்பாடு உச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் மின் தேவை கோடை காலங்களில் 3100 மெ.வா.க்கு குறையாமலும் மழைக்காலங்களில் 2500 மெ.வா. மின்சாரமும் தேவைப்படுவதாக கூறிய அதிகாரிகள்,

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் தேவை பெருமளவு குறைந்ததால் அந்த காலகட்டத்தில் மின் தட்டுப்பாடு மற்றும் மின் தடை ஏதும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டனர்.

சூரியசக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வரை மின் விநியோகத்தில் பெருமளவு பாதிப்பு இருக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.