சென்னை: செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை ஐஐடி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்றுபுதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது. இதனால் மொத்த பாதிப்பு 34,54,153-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,662-ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 28 பேரும் செங்கல்பட்டில் 20 பேரும், காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  செங்கல்பட்டில் செயல்பட்ட வரும்  சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாணாக்கர்களுக்கு  லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் 25 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.