சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் அரசுப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த மாணவி மேல் சிகிச்சைகாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக மாணவ மாணவிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முயற்சியை நாடிய நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம் அடங்குவதற்குள் சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தற்போது செங்கல்பட்டுவில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் 500-கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கஜசுபமித்ரா என்ற மாணவி, பள்ளி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் இடுப்பு எலும்பு உடைந்துள்ளது. அவரை மீட்ட ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….