செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,620 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 54,449 ஆக அதிகரித்து இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 30,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக உள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் அண்டை மாவட்டமான செங்கல்பட்டில் ஏற்கனவே 3,432 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தற்போது இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 1,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களை மட்டுமல்லாது, அதிகாரிகளையும் கொரோனா தொற்றி உள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி உதவியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். அவரை தொடர்ந்து தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்ட நகராட்சி ஆணையருக்கும் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நகராட்சி அலுவலகம், வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.