அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்., சைதாப்பேட்டை, சென்னை

சென்னையில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் சைதாப்பேட்டை என்னும் ஊர் உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள்

மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

மூலவரின் பாதத்திற்கு அருகில் நரசிம்மர், சிம்ம முகம் இல்லாமல் சாந்தமான முகத்துடன் இருக்கிறார். எனவே இவர் ‘அழகிய சிங்கர்” என்றழைக்கப்படுகிறார்.

இங்குள்ள விமானம் ஆனந்த விமானம் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.

கோயில் முன்மண்டபத்தில் உள்ள ராமர் சன்னதி தெற்கு நோக்கியிருக்கிறது. மூலவர் ராமரின் வலப்புறம் சீதை, இடப்புறம்; லட்சுமணருடன் திருமண கோலத்திலும்.. உற்சவரின் வலப்புறம் லட்சுமணர், இடப்புறம்; சீதையுடன் பட்டாபிஷேக கோலத்திலும் காட்சி தருகிறார்.

இவ்வாறு ஒரே நேரத்தில் இங்கு ராமபிரானின் இரண்டு கோலங்களைத் தரிசிக்கலாம்.

ராமர் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார்.

சேனைமுதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.

இக்கோயிலில் பிரசன்ன வெங்கடேசருக்கு சன்னதி அமைத்தபோது, தற்போது அலர்மேல்மங்கை தாயார் சன்னதி இருக்குமிடத்தில் ஒரு புற்று இருந்தது.

அந்த புற்றின் உள்ளே தாயாரின் விக்கிரகம் இருந்ததைக் கண்டறிந்த பக்தர்கள், அச்சிலையை இங்கேயே பிரதிஷ்டை செய்து, சன்னதி எழுப்பி, தாயாருக்கு கல் விக்கிரகமும் அமைத்தனர்.

மண்ணில் இருந்து கிடைக்கப்பெற்ற சிலை என்பதால் அலர்மேல்மங்கை முகத்தில் வடுக்களுடன் காட்சி தருகிறாள்.

பங்குனி உத்திரத்தன்று, சுவாமி இவளது சன்னதிக்கு எழுந்தருளி திருமணம் செய்து கொள்கிறார்.

ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், அலர்மேல்மங்கை தாயார் சன்னதி முன்பு நெல் பரப்பி, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருவிழாக்கள்

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆவணியில் அன்னக்கோடி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 பிரார்த்தனைகள் 

திருமணத் தோஷம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் அலர்மேல்மங்கை தாயாரிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

 நேர்த்திக்கடன்கள் 

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.