சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மார்க் கட்டாயமில்லை என உயர்கல்வித்துறை  அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என்று தமிழகஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்ணும் கட்டாயம் என்று வழக்கத்தில் இருந்தது. பொதுத் தேர்வு ரத்து காரணமாக பெரும்பாலான மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ள நிலையில், சிக்கலை தவிர்க்க உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜூலை 26ந்தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  ரேண்டம் என் ஆகஸ்ட் 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பொறியியல் தரவரிசை பட்டியலில் ஒரே மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்று இருந்தால் எவ்வாறு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை  வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கணிதம், இயற்பியல், விருப்பப்பாடம், ரேண்டம் எண், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும், இதில் வேதியியல் பாட மதிப்பெண் குறிப்பிடப்படவில்லை.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பதிவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.