அமராவதி: தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவிலான  கிரானைட் கற்கள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெற்று வருவதாக கடிதம் எழுதிய நிலையில், தற்போது கிரானைட் கடத்தல் தொடர்பாக அரசுக்கு கடிதம் உள்ளார்.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களான மணல், கற்கள், கிரானைட்கள் மற்றும் ரேசன் அரிசிகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி கூறினாலும், அரசியல் வாதிகளின் ஆதரவோடு கடத்தல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்,  ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிரானைட் கடத்தல் கும்பல் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டி, தமிழக அரசுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,”ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை (எனது) தொகுதியை சேர்ந்த கிரானைட் மாஃபியாக்கள், அங்கிருந்து கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்து, அவற்றை கிருஷ்ணகிரி வேலூர் மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு கடத்துவதாக தகவல் வந்திருக்கிறது.

ஆந்திராவிலிருந்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை கடத்தி, தமிழ்நாட்டிம் கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை அடைவதற்காக குறிப்பிட்ட சில வழிகளை கடத்தல் காரர்கள் பயன்படுத்துவதும் தெரியவந்திருக்கிறது. அதன்படி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் நதிமூரிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வரதானபள்ளி வழியாகவும், ஓ.என்.கொத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பனபள்ளி வழியாகவும், சித்தூர் மாவட்டம் மோதியசெனுவிலிருந்து வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கிரானைட் கடத்தப்படுகிறது.

ஆந்திரா, தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள், ஆந்திரப்பிரதேச கிரானைட் மாஃபியா கும்பலின் ஒத்துழைப்போடு இந்த குற்றத்தில் ஈடுபடுகின்றனர்/ வெட்டி எடுக்கப்பட்ட அந்த கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக தமிழகத்தின் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்கள் வழியாக கடத்தப்படுகிறது என்றும், இதன் காரணமாக ஆந்திர மற்றும் தமிழ்நாடு எல்லையில் கிரானைட் கடத்தல் கும்பல் அதிகரித்து உள்ளதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கும், ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டிக்கும் அனுப்பியிருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு ஏற்கனவே ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது கிரானைட் கடத்தல் குறித்தும் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ரேசன் அரிசி, கிரானைட் மற்றும் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

ரேசன் அரிசி கடத்தலை தடுங்கள்! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் வேண்டுகோள்