ராய்ப்பூர்

கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார்.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஆனால் கொரோனா பரவுதல் குறையவில்லை.   ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மக்களுக்கு உதவ பிரதமர் தரப்பிலும் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் தரப்பிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.  அவ்வகையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கொரோனா நிவாரண நிதி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் திரட்டி வருகிறார்.   இந்த நிவாரண நிதியின் கணக்கை  அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

பூபேஷ் பாகல் தனது டிவிட்டரில், ”கொரோனாவுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வந்துள்ள நிதி குறித்த கணக்கை உங்களுக்கு தற்போது அறிவிக்கிறேன். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் மே மாதம் 7 ஆம் தேதி வரை பல தரப்பட்டோரிடமிருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.56,04,38.815 ரூபாய் வசூலாகி உள்ளது

இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு மற்றும் தேவைப்படுவோருக்கு நிதி உதவிக்காக இது வரை ரூ. 10,25,30,000 வழங்கப்பட்டுள்ளது.   அரசின் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் நிதி அளிக்கும் போது அதன் கணக்குகளில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதற்காக  இதை அறிவித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.