ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள அசோக் கெலாட் தலைமை பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில முதல்வரும், மூத்த தலைவருமான, அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு  போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், மாநில முதல்வர் பதவியை பிடிக்க போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவரானால், முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கட்சியின் விதிப்படி, ஒருவருக்கு ஒரு பதவி என்பதால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் கெலாட், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு கெலாட் ஒப்புகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அசோக் கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்களைக் கொண்டு, பதவிகளை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்து, சச்சின் பைலட் முதல்வராவதை தடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழப்பம் நிலவி வருகிறது.  ஜெய்ப்பூரில் நடைபெற்ற  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இந்த கூட்டத்தில் 18 அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் பார்வையாளராக மல்லிகார்ஜூன் கார்கே கலந்துகொண்டார்.

காங்கிரஸ் மேலிடம், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க திட்டமிட்டிருந்த  முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு அளித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்தனர். இதற்கு பின்னணியில் கெலாட் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது. கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தது தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில், அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் சரியான முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை கட்சியின் இடைகால தலைவர் சோனியாகாந்தி தேர்ந்தெடுப்பார் என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்தார். அசோக் கெலாட்டின் பிடிவாதம், சச்சின் பைலட்டை முதல்வராக எதிர்ப்பு தெரிவிப்பது போன்றவற்றால், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பறிபோகும் நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைமை பதவிக்கு போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய சிங் போன்ற மூத்த தலைவர்களை தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

அசோக்கெலாட் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில முதல்வராக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.