ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது.

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  நிலவை ஆராய ஏற்கனவே 2 விண்கலங்களை அனுப்பி உள்ள நிலையில், 3வதாக சந்திரயான்3 விண்கலத்தை   ரூ. 615 கோடி செலவில் சந்திரயான் 3 திட்டம் தீட்டப்பட்டு தயார் செய்து ஜூலை 14ந்தேதி பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.   சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே சந்திரயான் 2-ல்  அனுப்பப் பட்ட ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளன.

சந்திரயான்3 விண்கலம், ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் சந்திரயான் 3  ஜூலை 14ந்தேதி  பிற்பகல் சரியாக 2.35.17  மணிக்கு கவுண்டவுன் முடிந்து  ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அதைத் தொடர்ந்து, அந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமான விண்ணில் நிலை நிறுத்தினர். அதைத்தொடர்ந்து சந்திரயான்3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை  படிப்படியாக 5 கட்டங்களாக விஞ்ஞானிகள் உயர்த்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து,  சந்திரயான்3  விண்கலன் புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, நள்ளிரவு 12 – 01 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதையை நோக்கி  பயணிக்கத் தொடங்கியுள்ளது.  ISTRAC இல் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான பெரிஜி-ஃபயரிங், இஸ்ரோ விண்கலத்தை டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தியது.

தற்போது சந்திரயான்3 விண்கலம்  பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இந்த விண்கலமானது  ஆகஸ்ட் 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட உள்ளது.  அதைத்தொடர்ந்து ஆகஸ்ட்டு 5- ம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான் விண்கலம் பயணிக்கும். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்க உள்ளது.