விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, விஜயவாடா விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால், இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இதையெல்லாம் மீறி, அவரின் கார் விமான நிலையத்தினுள்ளே அனுமதிக்கப்படவில்லை.

அவர், மற்ற பயணிகளுடன் சேர்ந்து விமான நிலைய பேருந்தில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், மற்ற சாதாரணப் பயணிகளைப்போல், பாதுகாப்பு சோதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டார். இவர், ஆந்திர முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையை தெலுங்கு தேசம் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு அலட்சியம் செய்யப்படுவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது அக்கட்சி.

விஜயவாடாவில், தேர்தல் தோல்வி குறித்து கட்சியினருடன் விவாதித்துவிட்டு, ஐதராபாத் செல்வதற்காக விஜயவாடாவின் கன்னாவரம் விமான நிலையத்திற்கு வந்தார் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.