சண்டிகர்:

நாட்டிலேயே முதன் முறையாக வாட்ஸ்ஆப் முலம் அரியானா  வில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அனுராக் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்பிர் சிங். இவருக்கும் அவரது சகோதரர்களான ராம்தியாள் மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோருக்கு இடையே குடும்ப சொத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சர்பிர் சிங், தனது சகோதரர்கள் மீது அரியானா நிதிஆணையர் கோர்ட்டில் மனு அளித்தார். இந்த மனு மீது பதிலளிக்கும்படி நிதிஆணைய நீதிமன்றத்தின் தலைவர் அசோக் கேம்கா  ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டார்.

அனுப்பப்பட்ட சம்மனை ராம்தியாள் பெற்றுக் கொண்டார். ஆனால், கிருஷ்ணன் காத்மண்டுவிற்கு சென்று விட்டதால் அவர் சம்னை பெறமுடியவில்லை.

இதையடுத்து உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் கிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு, சம்மனை அளிக்க அவரது முகவரியைத் தரும்படி கேட்டனர். . ஆனால் கிருஷ்ணன் தனது முகவரியை தர மறுத்துள்ளார்.

இந்த தகவல் அசோக் கேம்காவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது இமெயில் அல்லது மொபைல் எண்ணை முகவரியாக எடுத்துக் கொண்டு சம்மனை அவற்றில் மூலம் அனுப்ப அசோக் கேம்கா உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட் சீல் வைக்கப்பட்ட சம்மன் நோட்டீஸ், பிரிண்ட்அவுட் எடுக்கப்பட்டு, அது வாட்ஸ்ஆப் மூலம் கிருஷ்ணனுக்கு அனுப்பப்பட்டது.

இதுவரை சம்மன்கள் இமெயில் அல்லது பேக்ஸ் மூலமாக தான் அனுப்பப்பட்டு வருகின்றன.  வாட்ஸ் ஆப் மூலம் சம்மன் அனுப்பப்படுவது இதுவே முதன் முறை.

சம்மன் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே இதுபோன்ற உத்தரவை பிறப்பித்ததாக அசோக் கேம்கா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.