சென்னை:
மிழகத்தில் இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து, மேற்கு மத்திய வளைகுடாவில் மையம் கொண்டிருந்தது. இது, கிட்டத்தட்ட வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகே இன்று காலை அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, மெதுவாக வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரைகளில் நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த அசானி புயல் படிப்படியாக வலுவிழந்து இன்று காலை சூறாவளி புயலாகவும், நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த அசானி புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.