சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 14) சில இடங்களில்இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

மணம்பூண்டியில் 27 செ.மீ.மழை: 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ., சூரப்பட்டில் 21 செ.மீ., முகையூரில் 20 செ.மீ., கேதாரில் 15 செ.மீ., வேலூரில் 9 செ.மீ., முண்டியம்பாக்கத்தில் 8 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் 7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், ஆனந்தபுரம், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டி அரப்பிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதுபோல 17ந்தேதி அன்று கர்நாடக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.