ருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது.

தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான். ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது. பாம்பு மறைந்து விட்டது.

இதைக் கண்டு நடுங்கிப் போன வேடனும், அவன் மனைவியும் செய்வதறியாது திகைத்த வேளையில், நாரதர் மாறுவேடத்தில் வந்தார். அவர், அந்த புற்றை வெட்டும்படி கூறினார். வேடனும் புற்றை வெட்டினான். அப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவந்தது. பின்னர் பாலும், தேனுமாய் மாறி வந்தது. உள்ளே ஒரு அம்பிகை சிலை இருந்தது. அதை நாரதர் எடுத்து பிரதிட்டை செய்தார். அந்தச் சிலையை பயபக்தியுடன் வேடன் குடும்பத்தினர் வணங்கி வந்தனர். பிற்காலத்தில் பட்டமனை வீட்டுக் குடும்பத்தார் இங்கு கோயில் எழுப்பினர்.

கோயில் அருகில் இருந்த குளத்தில், புற்றில் இருந்த தண்ணீர் நிரம்பி சர்க்கரை போல இனித்தது. இந்த சர்க்கரைகுளமே “சக்குளம்” என பெயர் மாறியது.

ஆதிபராசக்தியான வனதுர்க்கையே, சக்குளத்தம் மாவாக அருள்பாலிக்கிறாள். 1981ல் எட்டு கைகள் கொண்ட தேவியை பிரதிஷ்டை செய்தனர்.

மேலும் சிவன், ஐயப்பன், விஷ்ணு, கணபதி, முருகன், யட்சி, நாகதேவதைகள், வனதேவதைகள் சிலைகளும் பிரதிட்டை செய்யப்பட்டது.

மார்கழி முதல் தேதியில் இருந்து 12 வரை, ஆண்களும், பெண்களும் இக்கோயிலுக்காக நோன்பிருக்கின்றனர். நினைத்த காரியம் நடக்க இந்த நோன்பு அனுசரிக்கப்படும். ஐயப்பன் கோயிலுக்கு செல்வது போலவே பிரம்மச்சரியம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கடமைகளைச் சரிவர கடைபிடிக்க வேண் டும்.

இந்த சமயத்தில் பெண்கள் இருமுடி கட்டி கோயிலுக்கு வருகின்றனர். இவ்வகையில் இது “பெண்களின் சபரிமலை” என்றும் சிறப்பு பெறுகிறது. 11ம் நாள் கலச அபிஷேகமும், 12ம் நாள் காவடி நிகழ்ச்சியும் நடக்கிறது.

மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாகப் பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் “நாரி பூஜை” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் பெண்கள் இதில் பங்கேற்கிறார்கள். இதைப் பார்க்கும்ஆண்கள், தங்கள் மனைவி, தாய், சகோதரிகளுக்குரிய மரியாதையைத் தர வேண்டும் என்ற மனநிலையை அடைவதாக நம்புகின்றனர். இத்தலத்து மண்ணுக்கு மகத்துவம் அதிகம். ஒவ்வொரு துகளையும் மாணிக் கம் போல் கருதுகின்றனர்.

கோயில்கள் கட்டுவதற்கும், வீடு, கட்டடம் கட்டுவதற்கும் இங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக் கொண்டு போகிறார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

கேரளாவிலுள்ள அம்மன் கோயில்களில் கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை ஏற்றப்படும் கோயில் இது மட்டுமே.

கார்த் திகை மாதம் திருக் கார்த்திகையன்று பொங்கல் உற்சவம் நடக்கும். அன்று, ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வணங்குகின்றனர். அன்று இரவில் சொக்கப்பனை ஏற்றப்படும். புரட்டாசி மாதம் ஆயில்ய நட்சத் திரத்தில் நாகராஜா, நாகயட்சிக்கு சிறப்பு பூசை நடக்கிறது. ராகுதோசம் உள்ளவர்கள் இந்த பூசையில் பங்கேற்கலாம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத வியாதியை உடையவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள், தாங்க முடியாத துக்கத்தில் இருப்பவர்கள், வியாபாரத்தில் நஷ்டமடைந்தவர்கள், எப்போதும் பயந்து கொண்டே இருப்பவர்கள் இங்கு வந்து வணங்குகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.