டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2022ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. ர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் கூட்டம் தொடங்கும் ஜனவரி 31ந்தேதி  இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில், காலை 11 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்று கிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் மாலை பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஆகியவையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.