பாட்னா: தொகுதி மாறி தன்னால் போட்டியிட முடியாது என்று பிடிவாதம் பிடித்துவரும் மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங்கால், பீகார் மாநில பாரதீய ஜனதா வட்டாரத்தில் சிக்கல் நிலவுகிறது.

தேர்தல் காலம் என்றாலே பல கட்சிகளில் முட்டல் – மோதல்தான். அதுவும் தேசிய கட்சிகள் என்றால் கேட்கவே தேவையில்லை. பிரச்சினைகள் தலைவிரித்து சடைப்பின்னி ஆடும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாரதீய ஜனதாவில் பிக்கல் – பிடுங்கல்களுக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில்துறையின் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் பாரதீய ஜனதாவின் கிரிராஜ் சிங்.

அவரின் விருப்பம் பீகாரின் நவாடா தொகுதியிலிருந்து போட்டியிட வேண்டுமென்பதுதான். ஆனால், அவரை அதே மாநிலத்தின் பகுசராய் தொகுதியிலிருந்து போட்டியிட வலியுறுத்தி வருகிறார்கள்.

பூபேந்திர யாதவ் மற்றும் நித்யானந்த் ராய் உள்ளிட்ட 5 மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு தலைவர்களின் மீதும் பாய்கிறார் கிரிராஜ் சிங். தனக்கு தொகுதி மாறியதே அந்த இரண்டு பேர்களால்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

– மதுரை மாயாண்டி